தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவுகளைத் தவிர்க்க புதிய பி.டெக் பட்டப்படிப்பு - சென்னை ஐஐடி தகவல்

காலநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கைச் சீரழிவுகளையும் தவிர்க்க B.tech Sustainability எனும் புதிய படிப்பை சென்னை ஐஐடி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும்; கார்பன் சேலஞ்ச் 2022 போட்டியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகளை இளம் கண்டுபிடிப்பாளர்கள் சென்னை ஐஐடியில் சமர்ப்பிக்கலாம் என சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 7, 2022, 10:27 PM IST

Updated : Sep 8, 2022, 5:01 PM IST

சென்னை:சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவுக்கான போட்டிகளை "கார்பன் சேலஞ்ச் 2022" எனும் தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி நடத்துகிறது. காலநிலை மாற்றம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு 2018ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடி இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி வருகிறது.

2022 கார்பன் சேலஞ்ச் போட்டி: அதனைத்தொடர்ந்து, கார்பன் சேலஞ்ச் 2022 போட்டியில், பஞ்சபூதம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. நிலம், நீர் காற்று, ஆகாயம், நெருப்பு உள்ளிட்டப் பிரிவுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் வருங்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் துறை என்பதால் ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர்களுக்கும் நிதி உதவி அளித்து கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுடன் கல்லூரியின் பேராசிரியர் இணைந்து குழுவாக கலந்து கொள்ள வேண்டும்.

கண்டுபிடிப்புகள் வரவேற்பு: இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'மாசு படுத்தாத தொழில்நுட்பம், குறைந்த கார்பன் வெளியீடு ஆகியவை தற்போது ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அவசியமாகும். நேற்று முன்தினம் பெய்த பெங்களூரு மழை காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அத்தகைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடி சார்பில் தொடர்ச்சியாக 3 வருடமாக கார்பன் சேலஞ்ச் நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.

ரூ.5 லட்சம் பரிசு:பூஜ்ய கார்பன் இலக்கை அடைதல் எனும் நோக்கத்தை அடையும் வகையில் அதற்கு உதவக்கூடிய நீடித்த நிலைத்த புதுமை படைப்புகளை கண்டறிய சென்னை ஐஐடி இந்தப் போட்டியை நடத்த உள்ளது. இம்மாதம் 24ஆம் தேதிக்குள் http://czeroc.in என்ற இணையதளத்தில் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த படைப்புகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்போருக்கு தங்கள் முன்முயற்சிகள் காப்புரிமையைப் பெறும் வகையில் ஐஐடி மெட்ராஸ் தனது காப்புரிமை செயல்பாட்டு வழிமுறைகளைத் தயார் செய்யும்.

கண்டுபிடிப்புகளுக்கு காத்திருக்கும் வெகுமதி: புதிய தொழில்களை தொடங்குவதற்கும் முதிர்ச்சி அடைவதற்கும், அவர்களின் கருத்துகளை சாத்தியமான வணிகமாக மாற்றுவதற்கும் உதவும் வகையில், இக்கல்வி நிறுவனம் வலுவான இன்குபேஷன் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. வளங்களை மீண்டும் பயன்படுத்த மறுபரிசீலனை செய்தல் வடிவமைப்பு மற்றும் பொருட்களைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தல், மீட்டெடுப்பு மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தேவைப்பாடு மற்றும் பூமியில் இருந்து கிடைப்பதை சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துவதே இந்தக் கருத்தாகும். தொழில்துறை மற்றும் பொதுச் சேவை அமைப்புகளுக்கு இதனை அடைய மாசுபடுத்தாத தொழில்நுட்பம் மற்றும் குறைந்த கார்பன், நிலத் தடம் ஆகியவை தேவைப்படுகிறது.

கிராமப்புற இளைஞர்களுக்கு வரவேற்பு:கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சுற்றுச்சூழுலைப் பாதுகாப்பதற்கானத் திட்டங்களை வைத்திருந்தாலும் அதனை தெரிவிக்கலாம். சென்னை ஐஐடியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், நீடித்த சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை ஐஐடியில் உள்ள கழிவுநீர்கள் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு அடுத்த 50 ஆண்டிற்குத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள ஆய்வகம் போன்றவற்றிற்கு ஏசி தேவைப்படுகிறது. அதற்காக ஒரே இடத்தில் இருந்து ஏசிக்கு குளிர்ந்த தண்ணீர் அளிக்கும் வசதியும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களில் தீயைத் தடுக்கும் கண்டுபிடிப்பு:மின்சார வாகனங்களில் தீ பிடிக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையிலான ஆராய்ச்சியை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளும் மேற்கொண்டு வருகின்றன. மின்சார வாகனங்களை பயன்படுத்துவதற்கு வங்கி ஏ.டி.எம்-களில் மின்சார வாகனங்களின் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தும் வகையிலான நமது யோசனைகள் அமைய வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்களை உருவாக்குவது நோக்கமாக உள்ளது' என தெரிவித்தார்.

இயற்கைச் சீரழிவுகளைத் தவிர்க்க புதிய பி.டெக் பட்டப்படிப்பு - சென்னை ஐஐடி

இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்பு... அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Last Updated : Sep 8, 2022, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details