மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களும் சேர்ந்து படிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. அதன் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏறத்தாழ 405 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டது.
இருப்பினும், இந்த ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த பல அரசுப் பள்ளி மாணவர்கள், கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, கல்விக் கட்டணத்தை ஏற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுகவின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசே இந்த கட்டணத்தை ஏற்குமென அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த பல மாணவர்கள், பணிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.