சிலைக்கடத்தல் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து மாயமானது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வுபெற்ற காவல் அலுவலரை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், ஆவணங்கள் மாயமானதாகக் கூறி சிலைக்கடத்தல் வழக்குகளை முடிக்கத் தடைவிதிக்கக் கோரியும், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், சிலைக்கடத்தல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கையூட்டுப் பெற்றுக் கொண்டு, வழக்கு ஆவணங்களைக் காவல் துறை அலுவலர்கள் திருடியுள்ளதாகத் குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கு ஆவணங்கள் மாயமாகிவிட்டதாகக் கூறி இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் திருடப்பட்ட விவகாரத்தில் செயல் அலுவலர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக, நீதிபதி பால் ஆணையம் அறிக்கை அளித்தும், அது தற்கொலை என இந்து சமய அறநிலையத் துறை வழக்கை முடித்துவைத்ததாகவும், பின்னர் வைரவேல் கோயில் உண்டியலிலிருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், யானை ராஜேந்திரன் தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.