சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹாரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சிவசங்கர் பாபா கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அடுத்தடுத்து சில நாடகங்களை ஆடினார்.
சிவசங்கர் பாபா
உடல் நிலை சரியில்லை எனக் கூறி வட இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டார். அவர் அங்கு சிகிச்சை எடுப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிவசங்கர் பாபாவை காவலர்கள் டெல்லியில் வைத்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது பெண் பக்தையான சுஷ்மிதா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் பத்திரிகை தாக்கல்
இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டது. மேலும் இதில் சுஷில்ஹாரி பள்ளி ஆசிரியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 30 முன்னாள் மாணவிகளை சாட்சியங்களாக சேர்த்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதற்கான ஆவணங்களையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.