சென்னை:விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் - மனைவிக்குப் பிறந்த குழந்தையைப் பார்ப்பது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையைப்பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனைத் தெரிவித்துள்ளார்.
தனிபட்ட இருவரின் புனிதமான சங்கமம் தான் திருமணம் என்றும், அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் இருவரின் கடமை எனவும் குறிப்பிட்ட நீதிபதி, பிரிவு என்கிற துரதிர்ஷ்டத்தால் கணவன், மனைவிக்குப் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், குழந்தைகள் அதன் பாதிப்பை உணர்வதுடன், மன வலியை அனுபவிப்பதாக கவலைத் தெரிவித்துள்ளார்.
பிரிந்த தம்பதியர், பரஸ்பரம் மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், குழந்தைகள் முன் மனிதநேயத்துடனும் நடந்துகொள்வது அவசியம் என வலியுறுத்தி உள்ளார். கணவன், மனைவி பிரிந்தாலும், இருவரையும் அணுகவும், அன்பு மற்றும் பாசத்தைப் பெறவும் குழந்தைகளுக்கு உரிமை உள்ளதாகச்சுட்டிக்காட்டிய நீதிபதி, சகத்துணையை புறக்கணிக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் குழந்தைகளும், தங்களைப்பார்க்க வரும் பெற்றோரை அலட்சியமாக நினைக்கத்தூண்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் எனவும், இது குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் செயல் எனவும் எச்சரித்துள்ளார்.