வில்லிவாக்கத்தை அடுத்த நியூ ஆவடி சாலையில் ஐசிஎஃப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ரயில் என்ஜின்கள், பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ரயில் பெட்டிகளுக்குத் தேவையான எலக்ட்ரிக்கல் உதிரி பாகங்கள், எண் 54 என்ற சேமிப்பு கிடங்குப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் சேமிப்புக் கிடங்கிலிருந்து தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. இதைக்கண்ட ஊழியர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கண்டு வில்லிவாக்கம், அண்ணா நகர், செம்பியம், எழும்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை வரவழைத்தனர். தீயணைப்புத்துறை தலைவர் சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து தீயணைப்புப் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.