சென்னை:கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பேருந்து கொள்முதல்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (அக்.28) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாட்டில் பேருந்து கொள்முதல் செய்வதற்காக 694 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மேலும், படிப்படியாக மாற்றுத் திறனாளிகளும் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதுதொடர்பான விரிவான பட்டியலுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 2ஆவது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க:ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!