சென்னை: 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 2020ஆம் ஆண்டு நேரடித் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரையில் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவுசெய்து கொள்ளலாம்.
சிறப்பு அனுமதி திட்டம்
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் மார்ச் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்புக் கட்டணமாகச் செலுத்தி இணையத்தில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்
கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் இணையதள விண்ணப்பங்களைப் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.