சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களில் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் நடத்திடவும், அவற்றைப் பராமரிக்கவும், பண்டையகால மன்னர்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் இன்றைய தேதி வரை, அசையும், அசையா சொத்துகளை தானமாக வழங்கிவருகிறார்கள்.
இத்தகைய சொத்துகளை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவற்றின் மூலம் வருவாயினைப் பெருக்கி, திருக்கோயில்களைப் பராமரிப்பதும், புனரமைப்பதும் இத்துறையின் முக்கியப் பணியாகும்.
திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் குத்தகை / வாடகைக்கு விடப்பட்ட இடங்களிலிருந்து வரப்பெற வேண்டிய குத்தகை / வாடகைத் தொகையானது பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் அதிக அளவில் நிலுவையில் உள்ளது.
குத்தகை / வாடகை நிலுவைத் தொகையினை 30 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில் வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர், நிர்வாகி, பரம்பரை அறங்காவலர் ஆகியோர் பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.