சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மானியக் கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திகுளத்திலும் என நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தார்.
அரசுக்கு அதிகாரம் இல்லை
இந்த அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரியும், அதை ரத்துசெய்து கோயில் சொத்துகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், "இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
கோயில் நிதி கோயில்களுக்கு மட்டுமே
20 ஆயிரத்திற்கும் மேலான கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை. கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாகச் சொத்து எதுவும் இல்லை. முதலமைச்சர் தொகுதி என்ற காரணத்தினால் அங்கு அவசரமாகக் கல்லூரி தொடங்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களைப் பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும். கோயில் நிர்வாகத்திலிருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகங்களும் கல்லூரி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. கோயில்களிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோயில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என வாதிடப்பட்டது.