சென்னை:கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச்செல்ல அவசர ஊர்தி வழங்காத விவகாரம் குறித்துப் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
ஆப்சென்ட்டான ஆம்புலன்ஸ்; அக்கம்பக்கத்தினர் டார்ச்சரால் தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்!
இச்சூழலில், ஜூலை 31ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரின் உடலை எடுத்துச் செல்ல அவசர ஊர்தி வழங்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் ஊர் மக்கள் தெரிவித்தும், 12 மணி நேரமாக வாகனம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உயிரிழந்தவரின் மகன் வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்து, தாயின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு சென்று, உடலை எரித்துள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர், இவ்விவகாரத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.