கரோனா தாக்கம் ஆரம்பக்கட்டத்தில் முகக் கவசம் அனைவரும் அணிய அவசியம் இல்லை எனவும் இருமல் - சளி இருப்பவர்கள் அணிந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு பல்வேறு ஆய்வுகள் முகக் கவசம் கரோனா பாதிப்பில் இருந்து ஒருவரை பாதுகாக்கும், பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்திருந்தது.
தொடர்ச்சியாக, தற்போது மத்திய அரசு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இச்சூழலில் தற்போது முகக் கவசத்தின் தேவை அதிகம் உள்ளதால், பயன்படுத்திய பிறகு அதை எவ்வாறு கையாள வேண்டும் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இதற்கு மாநகராட்சி சார்பாக பல்வேறு விழுப்புணர்வு காட்சிகள் வெளியிடப்பட்டாலும், பொதுமக்கள் இன்னும் கவனக் குறைவாக இருப்பதை சாலைகளில் பறக்கும் முகக் கவசங்கள் உணர்த்துகிறது. பொதுமக்கள் முகக் கவசத்தை அப்புறப்படுத்துவதில் கவனக் குறைவாக இருந்தால் பல்வேறு விளைவுகள் உண்டாகும் என எச்சரிக்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்.
முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ் இது குறித்து பேசிய அவர், "முகக் கவசத்தை அப்புறப்படுத்துவதில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். அதை எந்த சமயத்திலும் சாலைகளில் வீசக் கூடாது. அவ்வாறு செய்தல் தெருக்களில் இருக்கும் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கரோனா நோய்க் கிருமி பரவக்கூடும் அபாயம் உள்ளது. ஏனென்றால் ஒருவருக்கு கரோனா உள்ளதா என்பதை அறிவதற்கு நாட்கள் எடுப்பதால், அனைத்து முகக் கவசத்தையும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், முகக் கவசங்களை சரியாக அப்புறப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக பயன்படுத்திய முகக் கவசங்களை இரண்டு ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தி அலசி, அதை ஒரு பையில் போட்டு குப்பை தொட்டியில் போடலாம். வீட்டு அருகில் இடமிருந்தால் நன்கு எரித்துவிடலாம் அல்லது குழி தோண்டி புதைத்து அதன் மேல் நன்கு ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கலாம். துணி முகக் கவசத்தை துவைத்து பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.