தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவர்கள், செவிலியருக்கு முழு பாதுகாப்பு உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு - நீதிமன்றம்

சென்னை: கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு முழு உடல் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளனவா என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Apr 30, 2020, 1:26 AM IST

கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் ஆகியோரது அமர்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முழு உடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என பத்திரிகையில் செய்தி வெளியாகியதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இதுகுறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கால அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், மே 13ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details