தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க திட்டம் என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கி தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Jun 12, 2020, 12:13 PM IST

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்கள் இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு மே 5 ஆம் தேதி அறிவித்தது.

அதனடிப்படையில், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 பேர், இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு அரசு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளதால், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை கொண்டு வரும் நடைமுறை இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் விவரங்கள்? இதுவரை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை? சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன? பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன? என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழ்நாடு விமான நிலையங்களில் விமானம் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது? அந்தக் கோரிக்கைகள் மீது எடுத்த முடிவுகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்த வங்கதேசப் பயணி: தொடரும் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details