இதுகுறித்து சமூக சமத்துவ மருத்துவர் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? அதில் அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்? தனியார் மருத்துவர்கள் எத்தனை பேர்? உள்ளிட்ட விவரங்களை அரசு உண்மையாக வெளியிடவில்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசு தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும். மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
அரசு மருத்துவர்கள், சுகாதாரத் துறைச் சார்ந்த நிரந்தர ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குகிறது. அதேபோல், அரசு மருத்துவனைகளில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள், தனியார் மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்த மருத்துவர்களில் 90 விழுக்காட்டினருக்கும்மேல் தனியார் மருத்துவர்களாவர். தனியார் மருத்துவமனைகள் மருத்துவச் சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் அவ்வாறு ஈடுபடாவிட்டால், மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் , உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு மிரட்டுகிறது.
ஆனால் அந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் இழப்பீடு தர மறுக்கிறது. கடமையைச் செய்ய வலியுறுத்தும் அரசு, அவர்களுக்கான உரிமையை தர மறுப்பது சரியல்ல. கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவது வரவேற்புக்குரியது.