தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டுத்தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் குப்பைகள் எவ்வாறு அகற்றப்படுகிறது? - urbaser sumeet

ஒருவர் தும்மினால் கூட அவர்களை வெறுத்து ஒதுக்கும் இந்த கரோனா காலத்தில் கரோனா நோயாளிகளின் குப்பைகளை அகற்ற எவ்வளவு மனத்தைரியம் வேண்டும். அதை வேலையாக பார்க்காமல் சேவையாக பார்க்கும் ஊழியர்கள் இந்த சூழ்நிலையை எப்படி கையாள்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

By

Published : May 22, 2021, 10:19 PM IST

சேவை என்பது மானுடத்தின் மகத்துவம். அதனை சரியான முறையில் உரிய நபர்களுக்கு செய்வதுதான் ஆகப்பெரும் உன்னதம். அந்த உன்னதத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் முன்கள பணியாளர்கள். கரோனா இரண்டாவது அலையும் அதை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கும் ஏற்படுத்திய தாக்கத்தை சொல்லி மாளாது. உயிரை பற்றிய அச்சத்தால் ஊரே முடங்கி கிடக்கிறது. ஆனால் இவர்களின சேவைக்கு மட்டும் விடுமுறையே கிடையாது என்று சொல்லலாம்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காடு நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மாநகராட்சியின் அனுமதியுடன் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் குப்பைகள், கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 15 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 9 முதல் 15 வரையிலான மொத்தம் 7 மண்டலங்களிலும் அர்பேசர் சுமீட் (urbaser sumeet) என்ற தனியார் நிறுவனம் மாநகராட்சி சார்பிலான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.

வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முதல்மை செயலாளர் முஹ்மூத் சைட் கூறுகையில், "தூய்மை பணியாளர்களின் வசதிக்கேற்ப சென்னை மாநகராட்சி சார்பிலும் எங்கள் நிறுவனத்தின் சார்பிலும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருக்கும் குப்பைகள், கழிவுகளை சேகரிக்கும அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழங்கியுள்ளோம். மேலும் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் தருகிறோம்.

ஒரு வார்டுக்கு நான்கு முதல் ஐந்து, 3 சக்கர வாகனங்களை பயன்படுத்தி குப்பைகளை சேகரித்து அவற்றை மாநகராட்சி மண்டல அலுவலரிடம் ஒப்படைத்து விடுவோம். பிறகு வாகனம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பயன்படுத்திய கையுறை, முகக்கவசம், பாதுகாப்பு உடை அனைத்தையும் சரியான முறையில் அகற்ற அறியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்

குப்பைகளில் இருந்து கரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் குப்பைகள், கழிவுகளை தனியாக சேகரித்து அவற்றை பாதுகாப்பாக அகற்றி வருகின்றர். அதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு பை வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் குப்பைகள், கழிவுகளை தனியாக சேகரிக்கப்பட்டு வாரத்திற்கு ஒருமுறையென அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பாக அகற்றி வருகின்றர். இப்படி அவர்களிடமிருந்து மட்டும் 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சுமார் 10 டன் அளவிலான குப்பைகள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இது குறித்து பேசிய மேற்பார்வையாளர் மதன், "ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, இந்த ஏழு மண்டலங்களிலும் சேர்த்து சுமார் 8 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் மதியம் 2 மணி வரை எங்கள் பணி தொடர்கிறது. ஒரு வாரத்திற்கு தேவையான பையை முதலிலேயே கொடுத்துவிடுவோம்" என்றார்.

குப்பைகளை அகற்றுவதற்கென மாநாகராட்சியின் தனி வாகனம்

ஒருவர் தும்மினால் கூட அவர்களை தேசத்துரோகியாய் வெறுத்து ஒதுக்கும் கரோனா காலத்தில் கரோனா நோயாளிகளின் குப்பைகளை அகற்ற எவ்வளவு மனத்தைரியம் வேண்டும். அதை வேலையாக பார்க்காமல் சேவையாக பார்க்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் தன்னாரவலர்களுக்கும் ராயல் சல்யூட்!

ABOUT THE AUTHOR

...view details