கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காரணமாக உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டது. மேலும், பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படாததால், இத்தொழில் முற்றிலுமாக முடங்கியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம், கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை கொடுக்க முடியாத சிரமத்திற்கு உரிமையாளர்கள் ஆளாகியுள்ளனர்.
சென்னையில் மட்டும் சிறிய ரகம் முதல் நட்சத்திர விடுதிகள் வரை சுமார் 10 ஆயிரம் உணவகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 லட்சம் பேர் இத்துறையை நம்பியுள்ள நிலையில், வரும் நாட்களில் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய சென்னை உணவகங்கள் அசோசியேஷன் தலைவர் ரவி, “வேளாண் விளை பொருட்களில் 50 விழுக்காடு அளவு, உணவகங்கள் உள்ளிட்ட உணவு துறையால்தான் வாங்கப்படுகிறது. உணவகங்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளும் பாதிக்கப்படுவர். சொந்த ஊர் புறப்பட்டுச் சென்ற வட மாநிலத் தொழிலாளர்கள் திரும்ப வந்தாலும் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. அடுத்த 6 மாதங்களுக்கு வேலை வாய்ப்புகள் இருக்காது“ என்றார்.