சென்னையிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் மாணவிகளை மதமாற்றம் செய்ய முயல்வதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு அப்பள்ளியின் விடுதி இயக்குநர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டு பரப்பிய அவதூறு:சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் பெண்கள் விடுதி இயக்குநர் சாமுவேல் இன்று (செப்.12) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தனியார் மேல்நிலைப் பள்ளியின் பெண்கள் விடுதி குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன. சிஎஸ்ஐ திருச்சபையை அவமதிக்கும் நோக்கத்துடனும், விடுதி வாரியத்தின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தோடும், யாரோ திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்த மேல்நிலைப்பள்ளி 175 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அப்போதே விடுதியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கே படித்த மாணவர்கள் அரசாங்கப் பொறுப்புகளிலும் மற்றும் பிற துறைகளிலும் உயர்ந்துள்ளனர். அப்படிப்பட்ட இப்பள்ளியை களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம்.
வார்டனுக்கு வந்த மிரட்டல்?கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, சரண்யா மற்றும் சரஸ்வதி ரங்கசாமி அடங்கிய குழு விசாரணை நடத்தியது. அப்போது மாணவிகளிடம் பேசி இருக்கின்றனர். அவ்விருவராலும் வார்டன் மிரட்டப்பட்டிருக்கிறார். உடனடியாக இங்கே இருக்கும் மாணவிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். மாணவிகளிடம், 'இங்கே இருந்து நீங்கள் வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்' என ஆசை வார்த்தைக் கூறியிருக்கின்றனர். மேலும் அங்கிருந்து பெற்றோர்களுடைய முகவரியை எடுத்துச்சென்றுள்ளனர்.
மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றோம் - பள்ளி விடுதி இயக்குநர் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.ஏ.எஸ் அலுவலர் தலைமையில் குழு வந்து, ஒவ்வொரு மாணவிகளாக விசாரணை நடத்தினர். நாங்கள் மாணவிகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும் அவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி ஞாயிற்றுக்கிழமை இருக்க விட வேண்டுமெனக் கூறி இருந்தனர். வெகு தூரத்தில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளி விடுதி இதுவாகும்.
அனைத்தும் பொய்: விடுதி மோசமாக இருக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, நீங்களே நேரடியாக வந்து சோதித்துக்கொள்ளலாம். எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கின்றோம். மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றோம். பள்ளி ஆரம்பித்து 175 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பெற்றோரிடமிருந்து அப்படிப்பட்ட எந்தப் புகாரும் வரவில்லை.
ஆணையத்தின் அறிக்கை கிடைக்கவில்லை:பள்ளி விடுதிக்கான விதிமுறைகள் தற்போது தான் அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல், பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறோம். 'பைபிளை' தான் படிக்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. 175 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதால் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்தவுடன் மேல் நிர்வாகிகளிடம் பேசி, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்" எனக் கூறினார்.
முன்னதாக, கடந்த 6ஆம் தேதி இப்பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநில தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ, தமிழ்நாடு தலைமைச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ’பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை அழைத்து மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு அனுமதி மறுப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே, 24 மணி நேரத்திற்குள் அங்குள்ளவர்களைப் பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
தமிழ்நாடு ஆணையத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு முடித்துச்சென்ற பிறகு மாணவிகள் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மதத்தைப் பின்பற்ற நிர்வாகம் வலியுறுத்துவதாகவும்; எனவே, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளியில் மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு: மாணவிகளை மீட்க தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கோரிக்கை