முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். இதனை சகித்துக் கொள்ள முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இச்செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதை இந்நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றது.