சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைப்பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்தப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 160 நிவாரண மையங்கள் உள்ளன; 44 மையத்தில் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை
மாணவர்களின் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 500 இடங்களில் பம்புகள் மூலம் தேங்கியுள்ள, மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உதவி எண் - 1070
அரசு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர் சூழ்ந்துள்ள இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 1070 என்ற தொலைபேசியில், மாநிலக் கட்டுப்பாட்டு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
சென்ற அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்து விட்டார் என்பது குறித்து நான் பேசவில்லை. நான் ஆட்சிக்கு வந்தவுடனே மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்தி உள்ளோம்.
கடந்த கால ஆட்சியில் 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை; திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 50% பணிகள் செய்யப்பட்டுள்ளன, மீதம் உள்ள 50% பணிகளையும் செய்ய உள்ளோம்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நிவாரணப் பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள்
மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னை திரும்ப முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் ஸ்டாலின்!