தமிழ்நாடு

tamil nadu

கோயில் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது - நீதிமன்றம்

By

Published : Nov 4, 2020, 4:21 PM IST

கோயில்களின் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களின் நிலங்களை, கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

hindu religious endowment department
hindu religious endowment department

சென்னை: இந்துசமய அறநிலையத் துறை கோயில்களின் நிலங்களை, கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சின்ன நீலாங்கரையிலுள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம், இந்துசமய அறநிலையத் துறை அனுமதி இல்லாமல், 70 ஆண்டுகளுக்கு முன்பு 1965ஆம் ஆண்டு மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மீன்வளத் துறை மூலம் மீன் அங்காடி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் 70 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், ஆர்டிஓ அலுவலகம் அமைக்க கொடுக்கப்பட்டது. அறநிலையத் துறை இடங்களை கோயில் பயன்பாட்டிற்கு தவிர பிறவற்றிற்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த இரு கோயில்கள் உள்ளிட்ட பல கோயில் நிலங்கள் தொடர்பான வழக்குகளுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் இன்று (நவம்பர் 4) தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் வழக்கு தொடர்புடைய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை, கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களின் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை, அலுவலர்கள் அகற்றி, அது குறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்குகளை 6 மாதத்திற்கு பிறகு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details