மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020இல் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில், முன்னாள் துணைவேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரிடமும் ஆன்லைன் மூலம் கருத்துகளை கேட்டறிந்ததோடு, உயர்கல்வித்துறையில் உள்ள பிற அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, மத்திய கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது.
அதில், பல்கலைக்கழகங்களின் மூலம் புதியப் பாடப்பிரிவுகள் துவங்குவது, பட்டப்படிப்புகளில் மாணவர்கள் படிக்கும் காலத்தினை மாற்றி அமைப்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் எந்தப் பகுதியிலும் இட ஒதுக்கீடு குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதியை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.