செம்மரம் கடத்தியதாக மகபூ பாஷா என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவரது தாயார் பாலி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, மகபூ பாஷாவை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்படுவதாகவும், சுட்டுக் கொல்லப்படுவதாகவும் செய்திகள் வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், இந்த தொழிலாளர்களை, அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே உரிய வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்தனர்.