தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரிய அவசர மனு; இன்றே விசாரிக்க இயலாது - சென்னை உயர்நீதிமன்றம் - அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின் வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

By

Published : Jul 13, 2022, 12:37 PM IST

சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி கலவரத்திற்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ், நீதிபதி சதீஷ்குமார் முன் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி, எம்எல்ஏ தாக்கல் செய்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண்ணிடும் (அதாவது வரிசை முறைப்படி) நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. முன்னதாக, இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடியபோதும், ஈபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவந்தனர்.

இதற்கிடையே பொதுக்குழுவின்போது, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் இருதரப்பை சேர்ந்த பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜெகன் ஜீவன் ராம், கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை காவல் ஆணையர் பிரபாகரன் ஆகியோர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 146-ன் படியும், மாநகர காவல் சட்டம் 41ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து அன்றே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை, அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக நேற்று ஜூலை 12 பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்திருந்தார்.

அதற்கு நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை ஜூலை 13 விசாரிக்கப்படும் என்று நேற்றைய தினம் தெரிவித்தார். இதேபோல வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஒ.பன்னீர்செல்வம் தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறிப்பாக, அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து வரும் ஜூலை 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details