சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல்செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குள்பட்ட பாப்பான்சத்திரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர், வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு, 1884ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி விநாயகா என்பவர், அவருக்குச் சொந்தமான 177.77 ஏக்கர் நிலங்களை உயில் எழுதிவைத்து, அதைப் பத்திரப்பதிவு செய்திருந்தாலும், 2008ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதிதான் உயர் நீதிமன்றத்தால் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், உதவி செட்டில்மெண்ட் அலுவலர் முன்பு கோயில் நிர்வாகத்தினர் ஆஜராகி பட்டா கோரியபோது, அது நிராகரிக்கபட்டு 1956 நவம்பர் 30 முதல் அனாதீன நிலமாக அறிவிக்கப்பட்டதாக அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், கோயில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படாதது குறித்தும், கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரியும், புற சொத்துகளைக் கண்டறிய கோரியும், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அரசு, வருவாய்த் துறை, பதிவுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.