கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் அமைப்பை சேர்ந்த லோகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ’தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மண்டலங்களில் 3 கோடி பேருக்கு மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம் சார்பில் கட்டண அடிப்படையில் மின்சாரத்தை வழங்கிவருகிறது. புதிய இணைப்புகள் வழங்குவது, மின்சாரம் துண்டிப்பது, ஆன்லைனில் கட்டணம் பதிவு செய்வது, புதிய கம்பி வடங்களை அமைப்பது போன்ற பணிகளை அதன் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், மின் பகிர்மான கழகத்தில் உள்ள அலுவலர்கள் காலதாமதமாகவும், அலுவலர்கள் பணிக்கு வராமல் இருப்பதால் சேவை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அலுவலகங்களில் ஆதார் அடிப்படையிலும், அரசு அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் முதல் பயோ-மெட்ரிக் வருகை பதிவுமுறை நடைமுறையில் உள்ளது.
அதேபோல், மின்சார வாரிய ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் மூன்று முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், பயோ-மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இவ்வழக்கில் ஊழியர்கள் சங்கத்தை இணைக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.