சென்னை:திருப்பூர் மாவட்டம் சிவிரிபாளையத்தில் உள்ள பரமசிவன் சுவாமி கோயிலில் இருந்த மூலவர் சிலை கடத்தப்பட்டிருந்தது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், அந்தச் சிலையை மீட்டு, கும்பகோணம் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
பின், அந்தச் சிலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் கோயிலில் நிறுவப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையின்போது, ஆய்வுசெய்வதற்காகச் சிலையை முன்னிறுத்தும்படி, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிலையை எடுக்க கோயில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதை எதிர்த்து சிவிரிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சிலையைக் கடவுளாக மக்கள் நம்பும் நிலையில், நீதிமன்றம் கடவுளுக்கு அழைப்பாணை விடுக்க முடியாது என்று கூறி, கடவுளை முன்னிறுத்தும்படி உத்தரவிட்ட கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், சிலையை ஆய்வுசெய்ய வேண்டுமானால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வுசெய்ய வேண்டும் எனவும், சிலையை பீடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:'அம்மா உணவகத்தை மூடினால் என்ன? என துரைமுருகன் கேட்டது மனவேதனை...!'