சாந்தோம் தேவாலயம் அமைந்துள்ள குடிச்சேரி சாலையில், ஆதரவற்றோர் பலர் சாலையோரமாக வசித்து வருகின்றனர். அங்கு கேரளாவைச் சேர்ந்த தங்கப்பன் என்ற முதியவரும், கண் பார்வையற்ற மூதாட்டி ஜெயாவும் தள்ளுவண்டி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். ஊரடங்கால், அக்கம் பக்கத்தில் வாழ்பவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இங்குள்ளவர்களுக்கு உணவளிக்கின்றனர்.
இந்நிலையில், முதியவர் தங்கப்பனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சாலையோரத்தில் வசிப்பவர் என்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மூதாட்டி வேறு வழி இல்லாமல் உடல்நலக்குறைவுடன் முதியவரை தள்ளுவண்டியிலேயே வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், உடல் நலமின்றி முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். அவர் இறந்தது கூட தெரியாத பார்வையற்ற மூதாட்டி ஜெயா, அவருக்கு அருகிலேயே 1 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளார்.