தமிழ்நாட்டிலுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக தமிழ்நாடு மின்வார வாரியம் உள்ளது. பொறியியல் படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகள் முடித்தவா்கள் முதல் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் வரை, இத்துறையில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இத்துறையிலுள்ள பணியாளர்களில் ஹெல்பர், வயர்மேன் பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளவர்கள் ஆவர்.
மின்வாரியத்தில் துணை மின் நிலையங்கள் தனியார் பராமரிப்பில் விடப்பட்ட நிலையில், தற்போது ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களிலும் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியாட்களை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளது மின்வாரியம். வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய மின் இணைப்புகளில், மின் பழுது ஏற்படும்போது, மேற்குறிப்பிட்ட பணியாளர்கள்தான் முதலில் பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபடுவர்.
குறிப்பாக, வீடுகளுக்கு மின்சாரத்தைக் கடத்தும் மின்மாற்றியில் ஏற்படும் பழுதினை ஹெல்பர் அல்லது வயர்மேன்தான் பழுதுநீக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தற்போது தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின்பேரில், தலைமைப் பொறியாளர் (பணியாளர்) ரவிச்சந்திரன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி மின்சாரத்தைத் தரமான சேவையாக வழங்க வேண்டியுள்ளது.
3 ஆண்டுகள் தனியார் வசம்
இதற்கு மின்சாரத்தை அளிக்கும் கடத்திகளை தினமும் பராமரிக்க வேண்டியுள்ளது. எனவே பராமரிப்புப் பணிக்காக மூன்று ஆண்டிற்குத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கவும், தேவைப்பட்டால் கூடுதலாக மேலும் ஒரு ஆண்டிற்குத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
மேற்பார்வைப் பொறியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களில், 20 நபர்களை மூன்று ஆண்டுகள் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியில் அமர்த்தலாம்.
போராட்டத்தில் ஊழியர்கள்
இவர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அளிக்கப்படும். உதவிப் பொறியாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், 50 விழுக்காட்டிற்கு மேல் காலியாக இருந்தால் 20 பணியாளர்களைத் தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதற்குத் தனி டெண்டர் விடலாம். உதவிப் பொறியாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் காலியாக இருந்தால் இரு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை இணைத்து, 20 பணியாளர்களைத் தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதற்கென தனியாக டெண்டர் விடலாம்.