சென்னை: இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரலாறு காணாத வகையில் பெய்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமே அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.
இந்நிலையில், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நேற்று (டிசம்பர் 30) மதியம் முதல் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிக அளவில் பெய்தது.
அதி கனமழை
குறிப்பாக ஆவடி பகுதியில், நேற்று மட்டும் ஒரே நாளில் 23 செ.மீட்டர் அளவில் அதி கனமழை பெய்துள்ளது. இதனால், முக்கிய நெடுஞ்சாலைகள், தெருக்களில் நீர் ஆறாக ஓடுகிறது. ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீரானது தேங்கி இருக்கிறது. இந்த மழை நீரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.