தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை கடற்கரைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை பயன்படுத்தினால் அபராதம்; கண்காணிக்க குழு

மெரினா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளைக்கொட்டும் நபர்களைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 6, 2022, 5:46 PM IST

சென்னை: சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைப் பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைப் பகுதிகளாக பராமரிக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த மாதம் ஆக.5ஆம் தேதி முதல் மாநகராட்சியின் சார்பில் கடற்கரைப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட
சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் அலுவலர்கள் மூலம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்தொடர்ச்சியாக, மெரினா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப்பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளைக்கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தைச்சார்ந்த நபர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் என 16 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவானது சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் மாலை 4.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளைக்கொட்டும் நபர்கள் குறித்து கண்காணித்து
அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுவர்.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும்
மேற்கொள்வர். கடந்த மாதம் ஆக.17 முதல் செப்.02ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.31,100 வரை அபராதமும், பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.12,300 வரை அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச்செல்லும் பொழுது, அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா கடற்கரையை
உருவாக்க தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் உரிமம் இல்லாமல் இயங்கிய 160 கடைகளுக்கு சீல்

ABOUT THE AUTHOR

...view details