கோயம்புத்தூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். 39 வயதான இவருக்கு சிறுவயதிலிருந்தே இருதய பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மகேந்திரன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 27 வயதானவரின் இருதயம் தானமாகப் பெறப்பட்டு இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறும்போது, ”கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேந்திரன் இருதய நோயால் பாதிக்கப்பட்டு, 2019 ஜனவரி 29ஆம் தேதிமுதல் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவருக்கு இருதயத்தில் உள்ள அனைத்து வால்வுகளும் பழுதடைந்து செயலிழந்ததால், இருதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த ஒருவரின் இருதயம், இரண்டு சிறுநீரகம், கல்லீரல், எலும்புகள் அவரின் குடும்ப உறுப்பினரின் அனுமதியுடன் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இருதயவியல் துறை இயக்குநர் ஜோசப் ராஜ், மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் வெள்ளியங்கிரி ஆகியோர் தலைமையில், ஐந்து மணிநேரம் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இருதயம் பொருத்தப்பட்டது. தற்போது மகேந்திரன் நலமாக உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு முதன்முதலில் செய்யப்பட்ட வெற்றிகரமான இருதய மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்“ எனத் தெரிவித்தார்.
5 மணிநேரம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இதயம் பொருத்தப்பட்டது இதையும் படிங்க: சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு