தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

108 ஆம்புலன்ஸில் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமா? - சுகாதாரத் துறை செயலர் பதில்

சென்னை: மழைக்காலம் நெருங்குவதால் மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறிய சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், 108 ஆம்புலன்ஸில் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Health Secretary Press Meet

By

Published : Oct 18, 2019, 6:41 PM IST

தமிழ்நாடு அரசு சார்பில் மழைக்கால நோய் தடுப்புப் பணிகள், மருத்துவ முன்னேற்பாடுகள் குறித்து தனியார் மருத்துவமனைகளுக்கான ஆயத்த அலுவல் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் நடந்தது.

இதில் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பீலா ராஜேஷ் பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:

தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மருத்துவமனைகள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டால் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,
  • அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை தண்ணீர் புகா இடங்களில் வைத்திருக்க வேண்டும்,
  • ஜெனரேட்டரில் ஒரு மாதத்திற்கு தேவையான டீசலை சேமித்து வைத்திருக்க வேண்டும்,
  • ஆபத்து காலங்களில் நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் வைத்திருக்க வேண்டும்,
  • குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு நோய் காக்கும் மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்,
  • சுவாசக் கருவிகள் தடைபடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

உள்ளிட்ட அறிவுரைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்,

  • அவசர காலங்களில் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை அறிவிப்புப் பலகைகளில் வைத்திருக்க வேண்டும்,
  • ஒருவேளை தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் அதற்கு மாற்றாக எவ்வாறு தகவல்களை பரிமாறுவது என்பது போன்ற திட்டங்கள் வைத்திருக்க வேண்டும்.
    சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு

10 மாதங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் 3,486 பேர்

குடிநீரில் கொசுக்கள் வராமல் தடுப்பது, டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறை, கழிவு மேலாண்மை ஆகியவை குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிப்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பத்து மாதங்களில் மூவாயிரத்து 486 நோயாளிகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது டெங்கு சீசன் என்பதால் கடந்த மூன்று மாதங்களில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் டெங்கு தடுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

டெங்குவை கண்டறிய சிறப்பு அலுவலர்கள்

சுகாதாரச் சீர்கேடு இருக்கும் இடங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், கடலூர், வேலூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு தேவையான நடவடிக்கை எடுக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக மூன்று அலுவலர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details