தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறு அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ மாணவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்- ராதாகிருஷ்ணன் தகவல் - reopened medical colleges

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு கரோனா தொற்றின் சிறு அறிகுறி இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன் தகவல்
ராதாகிருஷ்ணன் தகவல்

By

Published : Aug 16, 2021, 1:36 PM IST

Updated : Aug 16, 2021, 1:46 PM IST

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் 2, 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள், வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் 2, 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறு அறிகுறி இருந்தாலும் தனிமைப்படுத்தல்:

மருத்துவக் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் 48 மணி நேரம் முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று எடுத்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வராத மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சிறு அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் மாணவர்கள் தாங்கள் நேரடி வகுப்பில் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மதக்கூட்டங்களால் அதிகரிக்கும் கரோனா:

கரோனா தொற்றை பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக ஏறக்குறைய இரண்டாயிரம் என்ற அளவில் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.

சென்னை, அதைச் சுற்றியுள்ள இடங்களில் மதம் சார்பான கூட்டங்கள் நடைபெறும்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து சவாலை ஏற்படுத்துகிறது. அதேபோல் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொற்று பரவியதுபோல் இங்கும் சவாலை உருவாக்கியுள்ளது.

500 குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஒருவருக்கு நோய் தொற்று வந்து அவர்கள் விளையாட்டு பகுதிக்கு வருவதால் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் நிலை உள்ளது. அதனையும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணி செய்யும் இடங்களில் உள்ளவர்கள் மூலமும் நோய்த் தொற்று பரவி வீட்டில் உள்ளவர்களுக்கும் கரோனா வருகிறது.

சராசரி எண்ணிக்கையை விட குறையும் கரோனா:

தமிழ்நாட்டில் சராசரியாக 1.2 விழுக்காடு நோய்த் தொற்று பரவல் உள்ளது. 32 மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ் உள்ளது. மற்ற மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனா நோய் குறைவாக உள்ள மாவட்டங்களில் நோய் தொற்று இல்லாத நிலையை உருவாக்கவும் கவனம் செலுத்திவருகிறோம்.

மகாராஷ்டிராவில் டெல்டா ப்ளஸ் தொற்று பரவி வருகிறது. கேரளாவில் தொடர்ந்து 20 ஆயிரம் என்ற நிலையில் தொற்று இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி போட்டுவிட்டு இரண்டாவது தவணை தடுப்பூசியை குறிப்பிட்ட காலத்தில் போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் முன்கள பணியாளர்களை கண்டறிந்து தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள குறையும் ஆர்வம்:

நேற்று முன்தினம் (ஆக. 14) 3 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நேற்று ஒரு லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தபோது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தற்போது தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் குறைந்துவருகிறது. அதற்கும் நாங்கள் தேவையான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தற்போது 12 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. அங்கு செய்யப்பட்டுள்ள பணிகள் திருப்தியாக உள்ளதாக அந்தந்த மருத்துவ கல்லூரி முதல்வரிடம் தேசிய மருத்துவ ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கப்பட்டவுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

Last Updated : Aug 16, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details