சென்னை:டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் “கரோனா தொற்று மற்ற மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகப்படுத்தி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பைக் கண்டறிந்தும், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து முடிவுகள் வரும் வரையிலும் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் 4 ஆயிரம் என செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி எண்ணிக்கை நேற்று 1.43 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தடுப்பூசியை புறக்கணிக்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் தவணையும் 1.4 கோடிக்கு மேல் 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை.
மக்கள் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், வாராந்திர மற்றும் தினசரி சந்தைகள், மதுக்கடைகள், பொதுப்போக்குவரத்தில் மாஸ்க் அணியாமல் சிலர் இருக்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையையும் பின்பற்றுகிறோம்.