தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கருப்பு பூஞ்சை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்' - ராதாகிருஷ்ணன்

கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கரோனா தொற்று பாதிப்பு அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு பொதுமக்கள் வர வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மியூகோர்மைகோசிஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்
மியூகோர்மைகோசிஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்

By

Published : May 20, 2021, 5:18 PM IST

Updated : May 20, 2021, 7:08 PM IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோய் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற வதந்தி பரப்பப்படுகிறது. இது புதிய நோய் அல்ல, ஏற்கனவே இருந்த நோய்தான்.

தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் ஒன்பது நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் ஏற்கெனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இரண்டு பேர் எந்தவிதமான நோய் அறிகுறியும் இல்லாதவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாேய்க்கு கூடுதலாக 50 ஆயிரம் மருந்துகள் வாங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோயின் தாக்கம் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில் 10 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை கண்காணித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடியில் கருப்பு புஞ்சை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் யாரும் இறக்கவில்லை.

மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

ஊரடங்கால் தொற்று பாதிப்பு குறைவு

பிற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, அதன் பின்னரே குறையும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறையாத நிலையில் கூடுதல் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தொடர் பரவல் செயினை தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். எனவே பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். கரோனா தொற்றுப் பாதிப்பு அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு பொதுமக்கள் வர வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிப் போடும் திட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில் , இது இணையதளம் மூலமாகவே பதிவு செய்யப்பட்டு பின்னர் போடப்படும். எனினும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்ட நோயானது கருப்பு பூஞ்சை
இந்நிலையில் கருப்புப் பூஞ்சை நோயினை அரசு அறிவிக்கப்பட்ட நோயாக சுட்டிக்காட்டியுள்ளது. இதன்மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களின் விவரத்தை அனைத்து மருத்துவமனைகளும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என மே-20 மாலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : May 20, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details