ரேலா மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய நாள் வரை, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, உதவிப் பணிகளைச் செய்துவந்தார் மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன். ஆனால், வாழ்வாதாரம் பாதித்தவர்களைக் கை தூக்கிவிடும் களத்திலேயே அவரின் வாழ்வு பறிபோயிருக்கிறது.
ஏற்கனவே நீரிழிவு, நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ. அன்பழகன், சில ஆண்டுகளுக்கு முன்புதான் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டார். தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கட்சிக் கூட்டங்கள், சட்டப்பேரவை நிகழ்வுகள், போராட்டங்கள், கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பு என்று பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தவரை, கரோனாவும் சோதித்து பார்த்தது.
ஊரடங்கால் தொழில், வருவாய் இல்லாமல் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பொருளாதார இழப்பில் சிக்கிக்கொண்டிருந்தபோதுதான், ’ஒன்றிணைவோம் வா’ என்ற மக்களுக்கு உதவும் வகையிலான திட்டத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜெ. அன்பழகன் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளிலும், தனது வீடு அமைந்துள்ள தியாகராய நகர் பகுதிகளிலும் தொடர்ந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடிவு செய்ததைக் கண்டித்து, அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் தலைமையில்தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னரும் பல நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜெ. அன்பழகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஐந்து நாள்கள் முன்னதாக அதாவது, கடந்த மே மாதம் 27ஆம் தேதி, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினார். அவருடன் ஏராளமான திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுக்குப் பின்னர்தான் அன்பழகனுக்கு லேசான உடல் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியாக மே 29ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ஜெ. அன்பழகன் தலைமையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. லேசான காய்ச்சலுடன் அதில் கலந்துகொண்ட அன்பழகன், காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டு அன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்தார்.