தமிழ்நாடு

tamil nadu

’கொரோனாவை தடுப்பது குறித்து விஜயபாஸ்கர் சீனாவிற்கே அறிவுரை வழங்கலாம்’ - காங்கிரஸ்

By

Published : Mar 12, 2020, 3:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar

சட்டப்பேரவையில் இன்று கொரோனா வைரஸ் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ராமசாமி, ” கொரோனா வைரஸைத் தடுக்கும் மாஸ்க் விலை அதிகரித்துள்ளதுடன், கிடைப்பதும் இல்லை. மாஸ்க் பயன்படுத்த தேவையில்லை என்று அரசு கூறினாலும், தற்காப்பாக இருக்க மக்கள் விரும்புகிறார்கள். இவ்விவகாரத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் வேகமாக செயல்படுகிறார். எனவே அவர் கொரோனா பாதித்த சீன நாட்டிற்கே ஆலோசனை வழங்கலாம் “ என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ வைரஸ் வேகத்தைவிட வதந்தி வேகம் அதிகமாக இருக்கிறது. மக்கள் அதை நம்ப வேண்டாம். சீனாவிற்கு அறிவுரை வழங்க வேண்டும் என உறுப்பினர் கூறினார். ஆனால், வைரஸ் பாதித்த நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது எனக்கும் பொருந்தும்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 1.46 லட்சம் பேரை இதுவரை பரிசோதனை செய்துள்ளோம் . 1,425 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இருமல், தும்மல் வந்தால் உடனே மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணிய வேண்டிய நிலை தற்போது இல்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

கை கழுவ சானிடைசர்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வெளியிடங்களில் இருந்து வீட்டிற்கு திரும்பியதும் சாதாரண சோப் போட்டு கை, கால்களை கழுவினால் போதுமானது. கொரோனா பாதிப்புள்ள நாடுகளுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் வெயில் அதிகம் இருப்பதால் வைரஸ் பரவாது என்பதில் உண்மையில்லை. தற்போதைய சூழலில் கொரோனா குறித்து பதற்றமோ, அச்சமோ தேவையில்லை “ என்றார்.

இதையும் படிங்க: கொல்லிமலை ரகசியம் - துரைமுருகன் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details