இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் பெரியளவில் உள்ளது. இந்தத் தொற்றால் இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களோடு கரோனா தொற்றும் சேர்ந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 23 பேரில் தொற்று உறுதி செய்யப்பட்ட முதலாவது நபர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினார். எஞ்சியுள்ள 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டாவதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.
இரண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்னும் இரு தினங்களில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.