சென்னை:தமிழ்நாட்டில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாமினை தி-நகர் சட்டப்பேரவை அலுவலகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (டிச.11) நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு கோடியே 54 லட்சத்து 02 ஆயிரத்து 698 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில், முதல் தவனை தடுப்பூசியை 81.30 விழுக்காடு பேரும், இரண்டாவது தவனை தடுப்பூசியை 48.95 விழுக்காடு பேரும் செலுத்தியுள்ளனர்.
இந்திய அளவில் 2ஆவது தவனை தடுப்பூசி 53.50 விழுக்காடு என்ற அளவில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த அளவை தமிழ்நாடு எட்ட தொடர்ந்து பயணித்துகொண்டிருக்கிறது. இதுவரை நான்கு கோடியே 70லட்சத்து 65ஆயிரத்து 514 பேர் முதல் தவனை டோஸை செலுத்தியுள்ளனர்.
இரண்டாம் தவனை தடுப்பூசியை இரண்டு கோடியே 83 லட்சத்து 37ஆயிரத்து 184 பேர் செலுத்தியுள்ளனர். 94 லட்சத்து 15 ஆயிரத்து 147 பேர் இரண்டாம் தவனை செலுத்த வேண்டிய காலம் முடிந்து காத்திருக்கின்றனர். இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கையிருப்பில் 95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தற்போது உள்ளன.
78 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட சென்னையில் இதுவரை 60 விழுக்காடு பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 48 விழுக்காடு பேர் மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ப்பட்டு வருகிறது.