சென்னை: தமிழ்நாடு அளவிலான புகையிலைத் தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை கூட்ட அரங்கில் இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் ஆயிரம், இரண்டாயிரம் கடைகளுக்குச் சீல் வைத்தோம் என்பதை வெளியில் கூறினால், அவர்கள் குட்கா பொருட்களை விற்பனை செய்யமாட்டார். இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதித்தால் விற்பனை செய்யமாட்டார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10, 20 நிறுவனங்களுக்குச் சீல் வைத்தால் 2 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் குட்கா, பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறாது.
பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு
குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் உபயோகப்படுத்துகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு முன்பாக குட்கா பாதிப்பை உணர்த்தும் விழிப்புணர்வு படங்கள் வைக்க வேண்டும்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு வியாபாரிகள் விற்பனை செய்யமாட்டோம் என்ற உறுதிமொழி எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகளவில் தடுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
கவனம் செலுத்த முடியவில்லை
கடந்த எட்டு ஆண்டுகளாக முறைகேடாக விற்பனை செய்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களாக கரோனா தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தியிருந்ததால், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. குட்கா எங்கும் இல்லை என்ற நிலையை இரண்டு மாதங்களில் உருவாக்க வேண்டும்.
குட்காவுக்கு கோட் வேர்டு
கடைகளில் சென்று குட்கா கொடு என்று கேட்பதில்லை, தலையணை கொடு என குறியீட்டு வார்த்தைகளில் வைத்து வாங்குகின்றனர் . இந்த குறியீடெல்லாம் குட்கா விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டுமே தெரிகிறது.
குட்காவை ஒழித்தே ஆக வேண்டும், முதலமைச்சரின் கனவும் அதுதான். கள ஆய்வு செய்யும்போது குட்கா விற்பனை செய்யும் கடைகளுக்குச் சீல் வைக்க வேண்டும்.
கடைகளை அடைத்தால் நான்கு பேர் நான்குவிதமாக திட்டுவார்கள். ஆனால், பல நூறு பேர் வாழ்த்துவார்கள். குட்காவை இப்போதே ஒழித்துவிட்டால், பல உயிர்களை காத்துவிட்டோம் என எதிர்காலத்தில் மன நிறைவு கிடைக்கும் . குட்கா , பான்பராக் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் குறிப்பிட்ட மாவட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் கைகளால் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?