சென்னை:தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகளினால் தடுப்பூசி செலுத்தியதில் 70 விழுக்காடு, என்ற இலக்கினை 10 நாட்களில் அடைவோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இறப்புக்கு 32 விழுக்காடு காரணம் இதய நோய்
சென்னை மெட்வே ஹார்ட் இன்ஸ்டியூட்டின் 5ஆவது கிளையைத் தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது,
'உலகில் நடைபெறுகிற இறப்புகளில் 32 விழுக்காடு இதய நோயினால் ஏற்படுகிறது என்று ஓர் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
சராசரியாக ஆண்டொன்றுக்கு 1 கோடியே 86 லட்சம் பேர் இதயநோயினால் இறக்கின்றனர். இந்நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இதய நோய்க்கான விழிப்புணர்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, போதை வஸ்துகள், புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
முதலமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்த தவறியதில்லை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறை கரோனா தளர்வுகள் அறிவிக்கிறபோதும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தத் தவறுவதில்லை.
முகக்கவசம் அணிவதில் தொடங்கி, கரோனா காலத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சி நிர்வாகங்கள், அதிகமாக மக்கள் கூடுகிற இடங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், கூடுதலான அபராதங்களை விதித்துக்கொண்டும் நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றன.
மக்களும் சுயக்கட்டுப்பாடுகளுடன் அவசியம் விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உயிர்களைக் காக்கத்தான் அரசு நடவடிக்களை மேற்கொள்கிறது என்பதை உணர்ந்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தளர்வுகளை அறிவித்துள்ளது என்பதற்காக விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிடக்கூடாது.