சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு பொதுமருத்துவமனை ஆகும். இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சைப் பெறுகின்றனர்.
இந்த நிலையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் தான் மிகப் பெரியதாகும். தற்போது அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி உள்ளன. மேலும், சமையல் அறையில் சப்பாத்தி கல், சமையல் அடுப்பு பழுதடைந்துள்ளது.
இதனால், அங்கு பணிபுரியும் பெண்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு வரும் தண்ணீர் சுகாதாரமில்லாமல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது எனவும், வாட்டர் டேங்க் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆவதாக அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.சுப்பிரமணியன், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குப்பைகளும் உணவுக்கழிவுகளும் நிறைந்த அம்மா உணவகத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனையின் RMO எனப்படும் நிலைய மருத்துவ அலுவலர், சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது என்று எழுந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் குப்பைகளும், உணவுக்கழிவுகளும் தென்பட்டுள்ளது. உடனே, சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து சுத்தம், சுகாதாரத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் மருத்துவமனையின் RMO மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: ராஜிவ்காந்தி மருத்துவமனை அம்மா உணவக சமையலறையில் இறந்துகிடந்த பெருச்சாளி - நடவடிக்கை உண்டா?