சென்னை:பெரும்பாலான மாணவர்கள் தொழில் நுட்பத்துறையில் படிக்கவும், பணியாற்றவும் விரும்புகின்றனர். அதனடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதாவது மாணவர்களுக்குப் படிக்கும் போதே பயிற்சி வழங்கும் முறையை பல கல்லூரிகள், நிறுவனங்களில் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், ஹெச்சிஎல் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை தேர்வுசெய்து, பயிற்சி அளித்து வருகிறது. இந்த ஓராண்டு பயிற்சித்திட்டத்திற்கு TechBee எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர்வதற்கு HCL SAT என்ற நுழைவுத்தேர்வை, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் HCL தேர்வுக் குழுவுடனான நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இதன்பின்னர் படிப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் போதே ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதையடுத்து முழுநேர வேலை வழங்கப்படும்போது, ரூபாய் 2–2.20 லட்சம் வரை சம்பளமும் அளிக்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்கள் https://www.hcltechbee.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.