கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி சத்திய நாரயணன், ஷேஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினார்.
தலைக்கவசம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் இல்லையென்றால், இந்த வழக்கில் மனுதாரரை நீக்கவிட்டு நீதிமன்றமே தாமாக வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளும் என தெரிவித்தனர்.
தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்துவது அலுவலர்களுடைய கடமை என தெரிவித்த நீதிபதிகள் அரசின் நிர்வாக பணிகளை நீதிமன்றங்கள் நடத்த முடியாது என தெரிவித்தனர். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் என்பது அரசின் சட்டம் எனவும், அது உரிய முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதை மட்டுமே நீதிமன்றம் விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை தவிர போக்குவரத்து துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் நீதிபதிகள் எழுப்பினர்.
சென்னையைத் தவிர மதுரை போன்ற பெரு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த காட்சி ஊடகங்கள் தங்களுடைய பங்களிப்பை செய்யவேண்டும் என தெரிவித்தனர். மேலும் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் போக்குவரத்துத் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.