தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court

By

Published : Aug 17, 2019, 8:31 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக்கோரி திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 2018இல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 211 அரசுப் பள்ளிகள், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகள், எட்டாயிரத்து 403 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளதாகவும் இந்தப் பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்றுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடு அரசு கல்விக்காக ஆண்டுதோறும், 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வரும்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கிலப் பேச்சுத்திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர முடியாத நிலையும் நல்ல வேலை வாய்ப்புகளை பெற முடியாத நிலையும் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணை இந்தாண்டு ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்றபோது மனுதாரரின் கருத்தை கேட்டு மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதையும் அப்பாவு சுட்டிக் காட்டினார்.

ஆனால் அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில் இதுவரை தன்னை அழைத்து கருத்தை கேட்கவில்லை எனவும், நடப்பு கல்வியாண்டு தொடங்கியபோதும் அரசு நடவடிக்கை எடுக்காததால் 85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் மீது அப்பாவு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவுக்கு உத்தரவிட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details