சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயதான சுதந்திர போராட்ட வீரர் கஃபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1997ஆம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ் தனக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கக்கோரி கஃபூர் விண்ணப்பித்திருந்தார்.
23 ஆண்டுகளாக தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பென்ஷன் வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கஃபூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தியாகிகள் பென்ஷன் கோரி, 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என கண்டனம் தெரிவித்து, மத்திய-மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்காததற்கு அரசை மட்டும் குறை கூற முடியாது எனவும், பென்ஷன் கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தில், பிறந்த தேதியிலும், சக கைதிகளின் சான்றுகளிலும் குறைபாடுகள் இருந்ததால், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி, வயதுக்கான சான்றாக மனுதாரர் ஆதார் அட்டையை சமர்ப்பித்துள்ளதாகவும், சக கைதி கண்ணன் என்பவர் அளித்த சான்றில் தட்டச்சு குறைபாடு மட்டுமே உள்ளதால், இந்த ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, மாநில அரசின் பென்ஷன் வழங்குவது குறித்து முடிவெடுத்து நவம்பர் 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல்ஹாசன் காட்டம்!