தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குண்டு பாய்ந்து இறந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு - Madras High Court

தெருநாய்களைச் சுடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14176911
14176911

By

Published : Jan 13, 2022, 3:30 PM IST

சென்னை:பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்த பாபு என்பவர் 2016ஆம் ஆண்டு தாக்கல்செய்திருந்த மனுவில், எறையூர் பஞ்சாயத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களைச் சுட்டுத் தள்ளுவதற்காக பஞ்சாயத்துத் தலைவர் குளஞ்சி, துணைத் தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் சேர்ந்து விஜயக்குமார் என்ற நரிக்குறவரை நியமித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாயை குறிவைக்காமல் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டிருந்தபோது, வீட்டு வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் விஜயாவின் காலில் குண்டுபாய்ந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பிய பின் மூன்று நாள்களில் இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாய்களைச் சுட உத்தரவிட்டதே தவறு

மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தபோது குண்டு பாய்ந்ததை மூவரும் தெரிவிக்காமல், வெறும் காயத்திற்கு மட்டும் சிகிச்சை கொடுக்கச் சொன்னதாகவும், உடற்கூராய்வின்போதே காலில் இருந்த நாட்டு குண்டு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நச்சுத்தன்மை உடைய குண்டுதான் தாயின் மரணத்திற்கு காரணமானதால், மூவருக்கும் எதிராக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், பின்னர் வழக்குப்பதிவு செய்த நிலையில் இழப்பீடு வழங்குவதாகக் கூறிய நிலையில், பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாய் பிடிக்கும்போது அஜாக்கிரதையாகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கைவைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், விஜயா உயிரிழந்ததற்கு நாய்களைச் சட்டவிரோதமாகச் சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், தெருவில் திரியும் நாய்களைச் சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்டவிரோதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

எனவே விஜயா மரணத்திற்கு காரணமான மூவரும் சேர்ந்த ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவில்லை என்பதால் தமிழ்நாடு அரசும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

மொத்த இழப்பீடான 10 லட்சம் ரூபாயை விஜயாவின் வாரிசுகளுக்கு எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பூஸ்டர் டோஸ் மெசேஜ் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details