குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கக் கோரியும், அரசியல் கட்சிகள் தொடங்கவும், கட்சிகளில் நிர்வாகிகள் பொறுப்பு வகிக்க தடை கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பி,எம்எல்ஏ-க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் அவற்றை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான 56 அவதூறு வழக்குகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, ஒரு நாளைக்கு 10 வழக்குகள் வீதம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு பட்டியலிட்டு, அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட்டது.
மற்ற வழக்குகளை நீதிபதிகளின் வசதிக்கு ஏற்ப விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணைக்கு எடுத்து, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என, கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை