அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கு முன்பாக குளத்தை தூர்வாரக்கோரி சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, அனந்தசரஸ் குளம் குறித்து தொல்லியல் ஆய்வு துறையும், நிரப்பப்படும் நீர் குறித்த ஆய்வு முடிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், பொதுவான நடவடிக்கை குறித்த அறிக்கையை இந்துசமய அறநிலையத்துறை உயர் மட்டக்குழுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதாகவும், ஆனால் மணல் மூட்டைகள் அகற்றப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குளத்தில் நிரப்பவுள்ள நீரின் தன்மை குறித்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், நீரில் உள்ள நுண்துகள்கள் வளரக்கூடியதா என்பதை ஆய்வு செய்ய மூன்று நாட்களாகும் என்பதால், ஆகஸ்ட் 19இல் அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்தது.
காவிரி நீரை சுத்தப்படுத்தி குளத்தை நிரப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளதாகவும், கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகேயுள்ள ஆழ்துளை கிணற்று நீரையும் நிரப்ப முடியும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொற்றாமரை குளத்து நீரையும் சுத்தப்படுத்தி நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எந்த நீராக இருந்தாலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குளத்தில் நிரப்ப வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இன்று (நேற்று) முதல் தினசரி அடிப்படையில் புகைப்படம் எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆழ்துளை கிணறு நீரை இன்றே (நேற்று) சோதனைக்கு அனுப்பவும், அதன் முடிவுகளை ஆகஸ்ட் 16இல் தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.